Result of Poetry Competition Fourth Edition
Category: Tamil

Title: மரமும் மனமும்

சிரிப்பில் சிந்திக்க வைத்த சிற்பியே - நீ
செதுக்கிய மரமும் சொல்லும் உன்னை யாரென
அன்பில் மனிதம் தைத்த அன்பியே - நீ
அணைத்த மனதும் கெஞ்சும் மீண்டும் வாவென

பல மனங்களைக் கவர்ந்த நீ - அந்த
மரணத்தையும் கூட கவர்ந்தாயோ?
பல மரம் நடுவென சென்ற நீ - அதை
இறையிடமும் கூற சென்றாயோ?

சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து
அழவும் வைத்தது நீதானோ?
எழுச்சி கொடுத்து உணர்ச்சி கொடுத்து
அதிர்ச்சியும் கொடுத்தது ஏன்தானோ?

தாயை தொலைத்த பிள்ளையாய் உன்னை
மரங்கள் கேட்க, என்ன நானும் சொல்ல
அவர் கனவை தொலையாது காப்போம் தவிர
இதழ்கள் சொல்ல வார்த்தை ஏதும் இல்ல

 

Winner

Subash

Link to writer : instagram.com/_subash_28

More details are here

 Title:  பிரிவுழல்தல்

பிரிதலுக்குப் பிறகான நாட்களில் என் இருத்தலை உணர்த்த உனக்கு ஓயாமல் தொலைபேசி தொல்லைகள் தருவதில்லை, கத்தியைக் கொண்டு கைகளைக் காயப்படுத்தவில்லை.

 

விஷம் ஏதும் நாடவில்லை, நம் தனிமகளை பகிர்வேன் என்ற விஷம எண்ணங்கள் இல்லை,  அமிலம் எரிதலோ, அழுது தீர்த்தலோ, விவாதங்களோ, புறம் கூறுதலோ ஏதுமில்லை.

 

மாறாய்,  முன்பை விட அமைதியாய், பணிகளை துரிதமாய் செய்து முடிக்கிறேன், நமக்கு பிடித்த பாடல்கள் அதிகம் கேட்கிறேன், உனக்கு பிடித்த உணவுகளை நானே சமைத்து ருசிக்கிறேன்.

 

 உன்னை மட்டுமே ரசித்த இடங்களில் விட்டுப்போன அனைத்தையும் கவனிக்கிறேன், நீ மெதுவாய் போகச்சொன்ன மேடுபள்ளங்களில் இன்னும் அப்படித்தான்.

 

அவ்வப்போது உன்னை நினைக்கிறேன் அக்கணமே நீ கூறியது போல வெறுத்தும் விடுகிறேன். பிரிதலுக்குப் பிறகான நாட்களில் என் இருத்தலை நிரூபிக்க நான் நானாகவே இருக்கிறேன்!!! அவ்வளவே....!!!

Runner up

Nithin kumar

Link to writer : instagram.com/am_nithinkumar_

More details are here

Top 10 Poets (inclusive of winners)

Title: விகல்பத்தின் விரல்கள்(திருநங்கை)

நரகாசுரனும் அல்ல,

நங்கையும் அல்ல;

பாடிடும் குயிலல்ல,

வாடிடும் மலரல்ல;

தாருகனின் குரலும்,

தாரகையின் நளினமும்,

தன்னகத்தே கொண்டு;

திருநங்கையென அறியப்பட்டு,

நகரத்து நாகரிகங்களில் 

நையப்புடைக்க பட்டு,

நாதியற்று நடுவீதிகளில்

நாணயத்திற்காக கையேந்துகிறார்கள் ,

தங்களது வாழ்நாட்களை கடந்த

இவர்கள் இவ்வையகத்தை பொருத்தவரை

பேசப்படாத பேசக்கூடாத இதிகாசங்கள் என்கிறார்கள்

திருநங்கைகளை பெற்ற திருக்களும் நங்கைகளும்...

அன்று குழந்தையாக தன்னை தடவியது,

விகல்பத்தின் விரல்கள் என வீதியில் நிற்கும் போது தான் உணருகிறார்கள்!

வீட்டிலேயே விதை இல்லாத போது

வீதிகளில் மாற்றத்திர்க்கான செடி

 எப்போது முளைக்கும்?

Poet: Sruthi

Title: அம்மா

 

வலி கொண்டு என்னை

வினை வழியே பெற்றவள்

பல்லொன்றும் விளையாத பவழவாய்க்கு

பசியாற பால்சுரந்தாயோ அன்று

 

தாலாட்டிச் சீராட்டி நாள்தோறும்

அவள் பிடித்த சோற்றுக்கு நாவூறும்

நான் செய்யும்க் குறும்புகளை அவள் ரசிக்க

அவள் கடிந்த வார்த்தைகளை நான் நினைக்க

கடுகில் கூட சிறு காரம் தொனிக்கும்

நீ சொன்ன சொற்களில் நானென்று கண்டேன்

 

ஊரறிந்த மூடனுக்குத் தாயென்றாலும்

உளமார கூறும் பேதையவள்

ஊர் சொல்லும் பிள்ளை என் மகனே என்று

அம்மா என்று நான் அழைக்க

மகனே என்று நீ வியக்க

அன்பை மொழியத் தமிழ்கூட தீரும்

நீ கொண்ட அன்பு என்றைக்கும் தீராதடி

Poet: Thirivikraman

Title: தாய்

அன்பின் உருவே தாய்!

     ஆர்வம் நல்கிடும் தாய்!

     இன்பம் அளித்திடும் தாய்!

      ஈரைந்து திங்கள் எனை நீ சுமந்தாய்!

      உப்பிட்டு என்னை நீ வளர்த்தாய்!

      ஊக்கமும் ஒழுக்கமும் ஊட்டி வளர்த்தாய்!

     எண்ணமெல்லாம் நற்செயல் பேன வைத்தாய்!

     ஏணிப்படிகளாய் என்னை நீ உயர வைத்தாய்!

     ஐயமின்றி வெற்றிநடை போட வைத்தாய்!

     ஒற்றுமையே உயர்வு என உணர வைத்தாய்!

     ஓய்வின்றி உழைக்க கற்பித்தாய்!

     ஔவையின் ஆத்திச்சூடி நீ திகழ்ந்தாய்!

      அஃதே வழியில் எனையும் ஈர்த்தாய்!

Poet: Janani

Title: சுதந்திர பாரதம்

திக்கெட்டும் திகையூட்டும் தீண்டிடவும் முடியா, 

தீபகற்பந் தான்எமது நாடடா

மதமொழியெனும் பலவேற்றில் பிழவுண் டெனினும், 

தாய்திருநா டெனுகையில் ஒருமிப்பதை பாரடா

 

வெள்ளையக் குண்டுகள் வெடிதாக்கி மிரட்டினும், 

அகிம்சைபோருக்கு அடங்கித்தான் போனதடா 

பொம்மனின் வாளும், போஸ்ஸின் படையும்,

வெள்ளைத்திரளை வியப்பினில் நனைத்ததடா

 

பாரதி எழுத்தும், குமரனின் மறமும்,

பீரங்கிப் போரையும் தகர்த்தெறிந்ததடா 

பார் திகைக்கும் வளங்கள் கொண்டு, 

பல்லுயிரணைத்து காப்பதெமது நாடடா

 

காவித்தூய்மை புகுத்தி, வெண்மையில் உண்மையூட்டி,

பச்சைச்செம்மை கலக்கியமூ வர்ணம்எம் கொடியடா 

முப்படை குண்டுமுழங்க மூத்தமுதற்குடிமகன் ஏற்ற,

காற்றில் கர்ஜித்துப்பறப்பதை பாரடா

 

யாம் வீழ்ந்தேனும் எந்தாய்காக்க மறவேனென்றுரைக்கும்,

இந்தியன் என்பது எம்பெயரடா

கீதக்கீர்த்தணையில் மிடுக்குடன் பறந்திடும் கொடிக்கு,

இறுக்கிய கரமும்உயர்ந்து வணங்குதடா……..

Poet: Karthikeyan M.

Title: தாசனின் காதலி

 

அவள்,
என் கவிதைக்கு உயிர்கொடுத்த 'அழகின் சிரிப்பு'
என் காதலுக்கு ஒளிகொடுத்த
'குடும்ப விளக்கு'.

அவள் பெயரோ
நான் கேட்கும் 'இசையமுது'
அவள் துயரோ
நான் சுமக்கும் 'இன்பக்கடல்'.

அவள் கண்களில் காட்டுவாள்
'இலக்கியக் கோலங்கள்'
அவள் பெண்களின் 'உலகுக்கோர் ஐந்தொழுக்கம்' ஆனவள்.

கோபத்தில் நெளியும்
அவள் புருவங்கள்
'பாண்டியன் பரிசு' பெற்ற
வீரத் 'தமிழச்சியின் கத்தி'.

அவள் ஞாபகங்கள்
நாள் முழுதும்
நான் புரட்டும்
'நாள் மலர்கள்'.

அவள் கனவில் தந்த
'எதிர்பாராத முத்தம்'
'கழைக்கூத்தியின் காதல்'
'கற்கண்டு'த் 'தேனருவி'.

அவள் பிரியம்
இயற்கையளித்த 'நல்ல தீர்ப்பு'
அவள் பிரிவோ
இதயத்திற்கு 'இருண்ட வீடு'.

இதோ இந்தப் புதுவை மைந்தன்
'புரட்சிக் கவி' பாவேந்தர் 'பாரதிதாசனின் கடிதங்கள்'
கள்ளமில்லாப் பாவை
'மணிமேகலை வெண்பா'விடம் சேர்த்துவிடுங்கள்.

அதுவரை 'முல்லைக்காடு' தன்னில் 'குயில் பாடல்கள்' கேட்டு
'அமிழ்து எது'? 'எது இசை'? என்று
அவள் குரலை மட்டும் தனிமையில் ரசித்திருப்பேன்.

இப்படிக்கு,
அன்புள்ள காதலிக்கு
'பாரதிதாசன் கவிதைகள்'
சூட்சும் 'புகழ்மலர்கள்'.

 

#மகாகவிப்ரியா@லட்சுமி

Poet: R. Lakshmi

Title: செவிலித்தாய்

நிறமாறும் வானத்துடன் நிரந்திரமாய் ஒட்டிக்கொண்ட வெண்மை மேகநிற ஆடைகொண்டு,

 

பன்னாட்டு ராஜ்யங்களை படையெடுத்து சூறையாடிய ராஜாதி ராஜனெல்லாம் பெற்றிடாத கிரீடம் கொண்டு,

 

சதாவதானம் புரிந்த அசாத்திய திறனாளிகள் எல்லாம் திக்குமுக்காடினாலும் பெறமுடியாத திறங்கொண்டு,

 

தந்திரங்கள் கொண்டு வஞ்சகங்கள் செய்து ஏமாற்றிவிட்டு ஏளனமாய் சிரிப்பவர்களை பொறுத்துக் கொள்ளும் குணம் கொண்டு,

 

கூச்சலிடும் கூட்டத்தை கீச்சிடும் குழந்தைபோல் நடத்தும் முதன்மை விந்தைகளின் அறிவாற்றல் கொண்டு,

 

ஏழேழு ஜென்மங்களுக்கு யோக்கியம் பெறும் அளவிற்கு புண்ணியம் புரிந்தும் இழிவாய் இகழப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளும் மனவலிமை கொண்டு,

 

திருட்டுத்தனமாக தானியம் தின்று ஆட்கள் கண்டதும் விரைந்து பறக்கும் புறாகூட்டங்களின் ஆற்றல் கொண்டு,

 

கடலினும் பெரிதான பெருமை பூத்திருக்கும் புத்த பிக்குகளை தராசில் சமமாக செய்யும் நிதானங்கொண்டு,

 

தேவலோக ஆண்டான் இந்திரதேவண் சபையில்  மந்திர நடனம் புரியும் ஊர்வசி, ரம்பை போன்ற அரம்பையர்களின் அழகை கொண்டு,

 

தன்னலம் மட்டும் உணர்ந்து அதற்கேற்ப உழைத்து சுயநலத்தில் மூழ்குவதற்கு பதில் பிறர் நலம் உணர்ந்து அவரிடதினுள் புகுந்து தேவைகளை அறியும் பச்சாதாபம் கொண்டு,

 

புயல் அடித்தாலும், மண் அரித்தாலும், கூர்மை மின்னும் இரம்பம் அறுத்தாலும் இருக்கும் இடத்தில் இருந்து எதிர்க்கும் கம்பீரம் காக்கும் மரத்தின் மறம் கொண்டு,

மகாத்மா படைத்த காந்தியடிகளை எடுத்துக்காட்டாக, மனிதத்தில் மங்கள தோற்றம் கொண்ட, அறம் கொண்டு,

 

மகத்தான தினமான மே தினம் கொண்டாட வேண்டிய தேவையை பூர்த்தி செய்யும் அளவிலான உழைப்பை கொண்டு,

 

அனைத்திற்கும் மேல்,

 

ஏற்ற விலை இல்லாத பெரும்  மதிப்பு கொண்ட  உயிரினை மயிர் கன அளவும்  பொருட்படுத்தாமல் பாடுபட கொள்கைகொண்டு,

 

மரம் வளர்க்க மறுக்கும் மக்களால் மலரப்பட்ட கொடூரனிடம் மனஅலசல்களுடன் போராடி வருபவர்களே செவிலித்தாய்!!!!!        

Poet: V. Lokesh

Title: தீண்டவா திரையன்பே; நீ தீண்டிடத்தானே நான் பிறந்தேன்! 

தீண்டவா திரையன்பே; நீ தீண்டிடத்தானே நான் பிறந்தேன்!
உன் மூச்சுகஂகாற்றே நேசமென்றேன். இன்றோ, கவசம் சலித்த சுவாசம் பெற்றேன்.

தீண்டவா திரையன்பே; நீ தீண்டிடத்தானே நான் பிறந்தேன்!
எங்கோ உள்ளது பெருஞ்சுவரு என்றிருந்தேன்.. இன்றோ நகர்ந்ததிங்கே நமக்கிடையே..

தீண்டவா திரையன்பே; நீ தீண்டிடத்தானே நான் பிறந்தேன்!
உனக்காய் கீரீடம் ஒன்றைத்தேடி நான் அலைவதுப்போல் சொப்பனம் ஒன்றைக்கண்டிருந்தேன்.. இக்கீரீடம் (கொரோனா) உனை நெருங்க வேண்டாமெனவே, அச்சொப்பனத்தை நான் கலைத்தேன்..

தீண்டவா திரையன்பே; நீ தீண்டிட தானே நான் பிறந்தேன்!
அலைகளோய விரும்புகிறேன்.. ஓய்ந்தால் நாமொன்றாய் திரையலையைக் காணலாமென்றே..

தீண்டவா திரையன்பே!
நீ தீண்டிட தானே நான் பிறந்தேன்!!

Poet: Ramkumar

Title: மழலையர் பள்ளி

புத்தாடை, புதுப்பை, புத்தகங்கள் 

என பெற்றோருடன் 

பள்ளிக்குச் சென்றேன்  ஆர்வமாய், 

வாசல் வரை மட்டுமே வருவார்கள் 

என்று அறியாமல்.... 

 

வகுப்பறை வந்ததும் 

அன்னை விடுத்தாள் 

என் கரத்தை;

அன்புடன் ஆசிரியை கோதினாள்

என் சிரத்தை.... 

வீட்டிற்குச் செல்லாதே 

என்னை விட்டுவிட்டு

அழுதபடி அணைத்தேன் 

அம்மாவின் முந்தியை, 

ஆரஞ்சு மிட்டாயுடன் 

ஆறுதல் கூறினாள் ஆசிரியை.... 

 

வியந்தேன்..வகுப்பறையில் 

கண்ணாடி உள்ளதோ என்று;

இல்லை...இல்லை... 

அறிந்தேன், அவை பிம்பங்கள் அல்ல

என் நண்பர்கள் என்று..! 

 

இரு நாட்டு மன்னர்களின் 

படை வீரத்தைப் பேசுவது போல் 

பேசிக்கொண்டோம்

யானும் என் தோழியும்

நாங்கள் வைத்திருந்த 

புது எழுதுகோலும் 

அழிப்பானும் பற்றி.... 

 

பண்பும் பாடமும் கற்றிட 

உற்சாகமாய் அந்நாள் கழிந்திட

மலர்ந்தது மாலை பொழுது! 

விடை பெற்றோம் 

இறைவனை தொழுது!! 

 

மீண்டும் மழலையாய் மாறவே 

மனம் ஏங்குதே.... 

எள் ஆக விரும்பும் 

எண்ணெயைப் போலவே!!!

Poet: Kasthuri

Like us on Facebook to stay connected and follow us on Instagram